பஞ்ச பூதங்களில் ஒவ்வொரு தலத்தில் ஒவ்வொரு வடிவில் சிவன் அருள் புரிகின்றார் என்பது தெரிந்ததே. அதில் திருவண்ணாமலையில் தான் முதன் முதலாக ஜோதி ரூபமாக தோன்றி பின்னர் ஈசன் லிங்கோத்பவராக அருள் புரிந்தார் என்று கூறப்படுகிறது. ஸ்ரீ காளஹஸ்தி வாயு தலமாக உள்ளது போல் திருவண்ணாமலை அக்னி தலமாக புகழ் பெற்றது. எனவே மஹா சிவராத்திரி அனுஷ்டிக்கபட்டது இந்த தலத்தில் இருந்து தான் இருக்கும் என்று கருதப்படுகிறது. கார்த்திகை தீபம் அன்று பக்தர்களால் லட்ச தீபம் ஏற்றப்படுவது போல் மஹா சிவராத்திரி அன்றும் லட்ச தீபம் ஏற்றி வழிபடுவார்கள். லட்ச தீபம் காண கண் கோடி வேண்டும் அல்லவா? சிவராத்திரி பலன் இரு மடங்காக கிட்ட கிரிவலம் வருவது பற்றிய தகவல்களை இப்பதிவில் காணலாம் வாருங்கள்.
மஹா சிவராத்திரியில் தொடங்கி தொடர்ந்து 12 தேய்பிறை சிவராத்திரி வரை அண்ணாமலை கிரிவலம் சென்று வந்தால் நிச்சயம் மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம். நள்ளிரவு 12 மணிக்கு ஆரம்பித்து அதிகாலை பிரம்ம முகூர்த்தத்திற்குள் அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும். ஆனால் அது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. எதாவது தடங்கள் வந்து கொண்டே இருக்கும். தடைகளை தாண்டி எப்படியேனும் இந்த விரதம் முடித்தால் அனைத்து பிறவியில் செய்த பாவங்கள் நீங்கப் பெற்று உங்களது ஆன்மா சுத்தமடையும். பின்னர் மூன்று ஆண்டுகளுக்குள் செல்வ செழிப்புடன், எல்லா வளங்களும் நிறைந்து வாழ்க்கை சிறக்கும் என்கிறது சிவபுராணம்.
உலகம் முழுவதும் இருக்கின்ற சிவாலயங்களில் மகா சிவராத்திரி கோலாகலமாக நான்கு ஜாம பூஜைகளுடன் இரவு முழுவதும் கண் விழித்து சிவ புராணம் பாடியும், மந்திர உச்சாடனம் செய்தும் வழிபடுவார்கள். அபிஷேக, ஆராதனைகள் வெகு சிறப்பாக நிகழ்த்தப்படும். பக்தர்கள் சிவனுக்கு விருப்பமானவற்றை தானம் கொடுப்பதன் மூலமும் நல்ல பலன்களை காணலாம்.